Annual Planner - 2025 Released by TRB!
TRB ஆண்டு அட்டவணை வெளியீடு: முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆகஸ்டில் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2025-ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகளின் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்யும் அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
நிகழாண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடா்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவை; 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும்.
அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 51 வட்டாரக் கல்வி அலுவலா்களை (பிஇஓ) நியமிப்பதற்கான தேர்வுக்கு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களும் பெரிதும் எதிா்பார்த்துக் கொண்டிருக்கும் டெட் தேர்வு குறித்து எந்த விதமான அறிவிப்பும் டிஆர்பி ஆண்டு அட்டவணையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு டெட் தோ்வு நடத்தப்படாது.
ஆண்டுக்கு இரு முறை... தமிழகத்தில் இறுதியாக கடந்த 2023-ஆம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சிடெட் தகுதித் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.