நோய்த்தொற்று எதுவும் நேராதிருக்க வேண்டும்
நாளைய தலைமுறை நலமோடிருக்க வேண்டும்
விட்டார்கள் விடுமுறை பள்ளிகளுக்கு விடுமுறை
சொன்னார்கள் அறிவுரை வீட்டிலிருக்க அறிவுரை.
வியாபாரம் குறையாமல் தக்கவைத்துக் காக்கவேண்டும்
மாணவர் நலனுக்காய் என்றுயர்த்திக் காட்டவேண்டும்.
துவங்கினார்கள் வகுப்புகள் நேரலை வகுப்புகள்
கல்வியை வியாபாரம் ஆக்கியோர்கள் வகுப்புகள்.
வகுப்பறையில் ஆசிரியர் கத்திக் கத்தி நடத்தினாலும்
கவனிக்கா மாணவர்க்கு நேரலை வகுப்புகள்
வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியே
தவித்து நிற்கும் மாணவர்க்கு நேரலை வகுப்புகள்.
கொரோனா பரவாமல் வீட்டுக்குள் இருப்பவர்க்கு
தயவு செய்து, தயவு செய்து மனச்சிதைவை வருத்தாதீர்
மனிதராக வளர்பவரை மிருகமாக மாறவைத்து
ஆசிரியரை வெறுக்க வைத்து அதில் லாபம் தேடாதீர்.
உளவியல் கல்வி யாருக்குத் தேவை
சிந்திக்கும் வேளையிது சிந்தித்துச் செயல்படுவீர்
நாளைய தலைமுறையை எந்திரமாய் நினைக்காதீர்
எந்திரமாய் மாற்றுகின்ற மந்திரத்தைச் செய்யாதீர்.
கல்வியை வெறும் ஒரு கடைச் சரக்காய் மாற்றாதீர்
கடைச் சரக்காய் மாற்றி அதன் புனிதத்தைக் கெடுக்காதீர்.
*கிராத்தூரான்.