விதிமுறைகள் பல உண்டு,
வரைமுறைகள் அதில் உண்டு
இத்தனை நாள் எகத்தாளமாய்
செய்த வினைகள் அனைத்திற்கும் எதிர்வினையும் மறு வினையும்
நிச்சயமாய் உண்டு.
உப்பில்லை, புளியில்லை என்று வெளியில் சென்றவர்க்கு
உப்புமாவும், புளிசாதமும் தினம் தோறும் உண்டு
விதவிதமாய் வகைவகையாய் உணவு வேண்டும் என்றவர்க்கோ
ஏதாவது கிடைத்தாலே போதும் என்று உண்டு.
உடல் நலத்தைப் பேணுதற்கோ நேரமில்லை என்றவர்க்கு
உடற்பயிற்சி மட்டுமே வேலையாய் உண்டு
பிள்ளைகள் விளையாட அழைக்கையிலே மறுத்தவர்க்கு
விளையாட யார் வருவார் என்ற ஏக்கம் உண்டு.
தூங்குதற்கு நேரமின்றி ஓடி ஓடி உழைத்தவர்க்கு
தூங்குகின்ற வேலை மட்டும் உண்டு
வீட்டினிலே இருப்பதையே வெறுப்பாக நினைத்தவர்கள்
வீடு கோவில் என்று சொல்வதுண்டு.
கொரோனா கொரோனா என்று வீட்டில் அமர்ந்தவர்க்கு
அங்கே ஒரு கொரோனா தலைவிரித்து ஆட
சோதனை மேல் சோதனை போதுமடாச் சாமி
என்று பாடி நடப்பவர்கள் அதிகம் ஊரில் உண்டு.
விடுமுறைக்கு விடுமுறை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம்
விடுமுறையில் இருப்போர்க்கு உண்டு
விடுமுறையில் வீட்டுக்குள் முடங்குகின்ற கொடுமை போன்ற கொடுமை வேறு என்ன தான் உண்டு
அறிந்தவர்கள் சொன்னால் தான் உண்டு.
*கிராத்தூரான்