மனிதர்களை அடங்க வைத்து வீட்டுக்குள் முடங்க வைத்த
உயிர் கொல்லிக் கொரோனா
தொலைக்காட்சிக்கு வந்திருந்தால்.....
எப்படி ஏமாற்றுவது, எப்படிக் கொலை செய்வது
எப்படித்தான் மனிதர்களை பரபரப்பாய் வைப்பது
பரபரப்பை ஒரே நாளில் எப்படித்தான் அடக்குவது
ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்றைப் புகுத்துவது
இவையெதுவும் பார்க்காமல் நிம்மதியாய் இருந்திருப்பார்
நிம்மதியைத் தொலைக்காட்சியில் தொலைத்துவிட்ட மனித இனம்.
வேலை வேலை என்று சொல்லி
ஓடி ஓடி உழைத்தவரை
அமரவைத்த கொரோனா கணினிக்கு வந்திருந்தால்.....
பலரது மூளைகளை மழுங்கடித்த
சிலர் மூளை
செய்துவைத்த செயல்களெல்லாம்
செயலற்றுப் போயிருக்கும்
மனிதரோடு மனிதர்கள் பேசுவதும் பழகுவதும்
அன்றுபோல் இன்றும் தொடர்கதையாய் தொடர்ந்திருக்கும்
விடுமுறையில் இருந்தாலும் வீட்டிலே இருந்தாலும்
பணிசெய்ய வேண்டுமென்ற பரிதவிப்பு தொலைந்திருக்கும்.
பெற்றோரை, உற்றாரை, நட்பையெல்லாம் பார்க்காமல்
விலகவைத்த கொரோனா
கைப்பேசிக்கு வந்திருந்தால்.....
ஒட்டிப் பிறந்த இரட்டையர் போல்
ஒன்றிப் போய் வாழ்ந்தவர்கள்
இணையைப் பிரிந்தாலும்
இயல்புக்கு வந்திருப்பார்
தலைநிமிர்ந்து வாழ்வதுதான் சிறப்பென்பதை மறந்துவிட்டு
தலைகுனிந்து வாழ்ந்தவர்கள்
சிரமுயர்த்தி வாழ்ந்திருப்பார்
கடமையை மறந்து விட்டு
பலவிதத்தில் மகிழ்ந்தவர்கள்
கண் காது திறன் பெற்று
கருத்துடனே வாழ்ந்திருப்பார்.
இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு வாழ்ந்திருப்பார்
இயற்கையை வியந்தவாறே
இயற்கையாய் இருந்திருப்பார்.
*கிராத்தூரான்