t> கல்விச்சுடர் என்ன சொல்லி நான் எழுத - கிராத்தூரான் கவிதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 April 2020

என்ன சொல்லி நான் எழுத - கிராத்தூரான் கவிதை


தரணியே தவித்து நிற்க
தடைகளால் தளர்ந்து நிற்க
உவகையைத் தொலைத்து விட்டு
உலகமே கலங்கி நிற்க
விலகவும் முடியாமல்
இணையவும் முடியாமல்
இதயமோ குழம்பி நிற்க
இமைகளோ கனத்து நிற்க
என்ன சொல்லி நான் எழுத
என்னவளே நான் எழுத.

உயிரடங்கா மல்இருக்க
ஊரடங்கில் நாடிருக்க
தெருவடங்கிப் போனதனால்
எருவின்றிப் பயிர்கள் நிற்க
பயிரடங்கிக் கிடப்பதனை
பார்த்து பலர் பதறி நிற்க
வயிறடங்க என்ன செய்வோம்
வரும்நாளில் அறியாதிருக்க
என்ன சொல்லி நான் எழுத
என்னவளே நான் எழுத.

அறிவு மங்கிப் போனவர்கள்
ஆரவாரம் செய்து நிற்க
பொழுதடங்கிப் போனபின்னும்
அடங்காமல் வெளி நடக்க
காதல் பொங்கி ஏங்கி நிற்கும்
நான் சட்டம் மதித்து நிற்க
என்னென்று தெரியாமல்
நீ அங்கே தவிதவிக்க
என்ன சொல்லி நான் எழுத
என்னவளே நான் எழுத

என்ன சொல்லி நான் எழுத!
என்னவளே நான் எழுத!

*கிராத்தூரான்

JOIN KALVICHUDAR CHANNEL