கனியிருக்கக் காய் கவர்ந்த காலமது மாறி
கனியின் சுவை தனி என்று உணர்ந்து விட்டோம் என்றால்....
கண் கெட்ட பின் அல்ல பார்வை உள்ள போதே
கதிரவனைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு வந்தால்.....
வாழ்கின்ற வாழ்க்கையொன்றும் உன் வாழ்க்கை அல்ல
வாழவைக்கும் அவன் அளிக்கும் வாழ்க்கையென்று அறிந்தால்.....
பகலென்றால் இரவுண்டு வெயிலென்றால் நிழலுண்டு
பணியென்றால் ஓய்வுண்டு
இயல்பெல்லாம் புரிந்தால்.....
படைத்தவனை நான் படைத்தேன்
அழிவையெல்லாம் நான் தடுப்பேன்
அண்டத்தின் அகராதியை மாற்றி நான் காட்டுவேன்
இது போன்ற
அகங்காரம் அடியோடு அழிந்தால்.....
உணவு விற்கும் கடைதனிலே ஊசி விற்க முயலாதும்
புண்படுத்தி, பண்படுத்தியதாய் நினைக்காதும் விட்டுவிட்டால்....
"இனியொரு விதி செய்வோம்,
எந்த நாளும் காப்போம்" என்கின்ற உறுதியோடு முன் செல்வோம் என்றால்.....
இனியெல்லாம் சுகமே, எந்நாளும் சுகமே
இனியெல்லாம் சுகமே, எந்நாளும் சுகமே.
*கிராத்தூரான்.