#கூந்தல்_பிரச்சனை அதிகரித்துவருவதால் எல்லோருக்கும் அதை பாதுகாப்பதும் சிரமமாக இருக்கிறது. இதனால் கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரை கெமிக்கல் கலக்காத இயற்கைக்கு மாற விரும்புகிறார்கள். இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. பெருகி வரும் இளநரை, வறட்சி, செம்பட்டை என்று முடியின் நிறங்களை மாற்றாமல் இருக்க இயற்கை தான் சிறந்தது என்பதை உணர தொடங்கிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இயற்கை முறையில் அழகை பராமரிக்கவே விரும்புகிறார்கள். கூந்தலை பொறுத்தவரை கூந்தலை சுத்தம் செய்ய பயன்படுத்துவதில் முதல் இடம் சீயக்காய்க்குதான் என்பது தெரியும். ஆனால் அதனோடு எதையெல்லாம் சேர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
#முக்கிய_பொருள்
சீயக்காய் - 500 கிராம்
எலுமிச்சை - 10
வசம்பு- 4
சீயக்காயை வாங்கி வெயிலில் உலர்த்துங்கள். எலுமிச்சைஇரண்டாக வெட்டி சாறு பிழியாமல் அப்படியே உலர்த்தி எடுங்கள். சாறுவடிவதை தடுக்க முடியாது ஆனால் வெயிலில் காயவைக்கும் போது சாறு தோலோடு சேர்ந்து காய தொடங்கும். வசம்பையும் சிறு துண்டுகளாக்கி மிஷினில் அரைத்து வைத்துகொள்ளுங்கள்.
எலுமிச்சை காய்வதற்கு தான் சற்று கூடுதலாக நேரம் பிடிக்கும். பிறகு அனைத்தையும் சேர்த்து மிஷினில் கொடுத்து மைய அரைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். இவை ஒரு வருடம் வரை கெடாது. பூச்சிகள் பிடிக்காது. வசம்பு சேர்த்திருப்பதால் குணம் மாறாமல் அப்படியே இருக்கும். இந்த சீயக்காய் பொருள் எப்போதும் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.
#இதர_பொடிகள்
நெல்லிக்காய்- 10
வெந்தயம் - 100 கிராம்
பூந்திக்கொட்டை - 100 கிராம்
செம்பருத்தி பூ -10
நெல்லிக்காயை கொட்டை நீக்கி பொடியாக்கி நிழலில் உலர்த்தி பொடியாக்குங்கள். அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லிப்பொடியை வாங்கி பயன்படுத்துங்கள். இந்த பொடியை 2 மாதத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
ஒற்றை அடுக்கு செம்பருத்தி இருந்தால் நல்லது. அவை கிடைக்காத பட்சத்தில் அடுக்கு செம்பருத்தியும் பயன்படுத்தலாம். பூவை அப்படியே காயவைத்து பொடித்து கொள்ளுங்கள். 50 பூவை போட்டு அரைத்தாலும் இவை 20 டீஸ்பூன் அளவு தான் இருக்கும்.
வெந்தயத்தையும் பூந்திகொட்டையும் சேர்த்து அரைத்து வையுங்கள். பூந்திக்கொட்டை சோப்புக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருள் என்றாலும் இதை அதிக நாள் வைத்திருந்து பயன்படுத்தகூடாது. அதனால் இதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரைத்து பயன்படுத்துங்கள். மேல் சொன்ன இந்த அனைத்து பொடிகளையும் அரைத்ததும் ஒன்றாக கலந்து பாட்டிலில் கொட்டி வைத்துகொள்ளுங்கள்.
#என்னென்ன_பலன்
சீயக்காய் பயன்படுத்தினால் கூந்தலில் அடரத்தியும் வளர்ச்சியும் கூடுதலாக பெறமுடியும். ஆனால் சீயக்காய் பயன்படுத்தும் போது அவை கூந்தலை வறட்சியடைய செய்யும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அதை தவிர்க்கவே கூடுதலாக இதர பொருள்களை சேர்க்கிறோம்.
நெல்லிக்காய் கூந்தலின் வறட்சியை தடுக்க கூடிய சத்து கொண்டது. செம்பருத்தி பூ பொடியானது கூந்தலுக்கு மென்மையை தருவதோடு போஷாக்கையும் தருகிறது.
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தது. இவை கூந்தலுக்கு பொலிவு மற்றும் வளர்ச்சி தரக்கூடியது. வெந்தயம் வழவழப்புதன்மை கொண்டது இந்த வழவழப்பை பட்டுபோன்ற பளபளப்பையும் கூந்தலிலும் பார்க்கலாம். பூந்திகொட்டை ஷாம்புவுக்கு மாற்றாக நுரைப்பு தன்மையையும் கூடவே வளர்ச்சியையும் கொடுக்கும் தன்மை கொண்டது. இந்த பொருள்களே போதும் உங்கள் கூந்தல் அழகாய் அடர்த்தியாய் வளர்வதற்கு.பொடுகு, பேன் பிரச்சனை இருப்பவர்கள் சீயக்காய் பொடி பயன்படுத்து போது வேப்பிலை மற்றும் துளசி இலையை பொடித்து சேர்த்துகொண்டால் பேன், பொடுகு பிரச்சனை இருக்காது.
#தலைக்கு_போடும்_போது
சீயக்காய் - 2 டீஸ்பூன் என்றால் இதர மூலிகைபொடிகளை -1 டீஸ்பூன் அளவு கலந்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் போது அவ்வபோது கலந்துகொண்டால் போதுமானது. சாதம் வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து கரைத்து கொள்ளுங்கள். தலைக்கு ஆலிவ் அல்லது சுத்தமான தேங்காயெண்ணெய் சேர்த்து மசாஜ் செய்த பிறகுதான் இந்த சீயக்காயை பயன்படுத்த வேண்டும்
இப்படி செய்வதால் கூந்தலுக்கு மசாஜ் செய்த பலனும் கிடைக்கும். அப்போதுதான் கூந்தலில் வறட்சி இருக்காது. அதோடு கூந்தல் பட்டு போன்று மின்னவும் செய்யும். வாரத்துக்கு இரண்டு நாள் இப்படி செய்து வந்தால் கூந்தல் எந்த பிரச்சனையும் இல்லாமல் அடர்த்தியாக வளரும்.
இளநரை, செம்பட்டை பிரச்சனைகள் இருக்காது. அடர்த்தியும் கருமையும் அதிகமாக இருக்கும். இயற்கையாகவே. முறையாக செய்தால் முன்னோர்கள் பெற்ற பலனை நாமும் பெறலாம்.