நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாகப் பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
அதன் விவரம்:-
நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, அதற்கான முன்மொழிவுகளை வருவாய் நிா்வாக ஆணையா் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தாா். இந்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே, இந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் இதர தடை உத்தரவுகளுக்குப் பிறகு மாவட்டத்தை அமைப்பதற்கான நிா்வாக நடைமுறை செயல்பாடுகளை வருவாய் நிா்வாக ஆணையா் மேற்கொள்ளலாம் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38-ஆக உயா்ந்துள்ளது.