பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையை மே மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்குமாறும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் 7 நாட்கள் எஞ்சியுள்ளன. மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா , கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் ஊரடங்கை நீட்டிக்காமல் தளர்த்துமாறு கோரியுள்ளன.
இந்நிலையில், கொரோனாவிற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுக் கூட்டம் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என சூசகமாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இந்த தடையுத்தரவு நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறையை மே 15ம் தேதி வரை நீட்டிக்கவும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Source: Polimer News