தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டியது பாதித்தோரின் எண்ணிக்கை
தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (ஞாயிற்றுகிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
'தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 39,041. 162 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 58,189. தமிழகத்தில் 14 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தினசரி 2,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன
இதுவரை 10,655 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 1,075 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 16 பேர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேரடியாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மீதமுள்ள 90 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
தமிழகத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 50 பேர் குணமடைந்துள்ளனர்.' என்றார்.