t> கல்விச்சுடர் உஷார் இதய நோய்! அறிகுறிகள் அறிவோமா? அலட்சியப் படுத்தாதீங்க நண்பர்களே..... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 April 2017

உஷார் இதய நோய்! அறிகுறிகள் அறிவோமா? அலட்சியப் படுத்தாதீங்க நண்பர்களே.....

உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில்தான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அறிக்கை ஒன்று. 2016-ம் ஆண்டு வெளியான ஒரு புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு 33 விநாடிகளுக்கும் இந்தியாவில் ஒருவர் மாரடைப்புக்கு ஆளாகி இறந்து போகிறார். உண்மையில், மாரடைப்பு தவிர்க்கக்கூடியதே! இதய நோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததாலும் அல்லது அலட்சியப் படுத்துவதாலும்தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். அந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாம் தப்பித்துவிடலாம். என்னென்ன அறிகுறிகள் அவை? பார்ப்போம்...


உறங்குவதில் சிரமம்!

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராகப் படுக்கையில் படுத்திருக்கும்போது தூங்குவதற்குக் கடினமாக உணர்வார்கள். நுரையீரலில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர், புவியீர்ப்பால் கீழ்நோக்கி இழுக்கப்படும். பிறகு அந்த நீர் நுரையீரல்களுக்கு இடையே அதிகமாகப் பரவும். இதனால் தூங்குவது கடினமாக இருக்கும். இதற்காக தூக்க மாத்திரைகள் உட்கொள்ள ஆரம்பித்தால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். 

வேகமாக எடை அதிகரித்தல்!

சாதாரணமாக ஒரு மனிதனுக்கு நிகழாத அளவுக்கு மிக வேகமாக எடை கூடும். இதயத்தில் நீர் கோத்தல் அல்லது இதய அடைப்பு போன்றவற்றால் இப்படி எடை அதிகரிக்கும். ரத்தக்குழாய்களில் கோத்துள்ள நீர், சுற்றியுள்ள திசுக்களிலும் சேர்ந்து எடை அதிகரிக்கும் வாய்ப்பைக் கூட்டும்.

கால் வீக்கம்

கால், பாதம் போன்ற இடங்களில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் அந்த இடங்கள் வீக்கமடையும். இதன் காரணமாக, நரம்புகள் நம் வயதுக்கு ஏற்றபடி ஒத்துழைக்காது, வேலை செய்யாது. 

அடிவயிறு வீக்கம்

அடிவயிற்றில்  நீர் கோத்துக்கொள்ளும். கல்லீரலிலும், செரிமானத் தடத்திலும் ஏற்பட்டிருக்கும் அடைப்பு காரணமாக கடுமையான வலி ஏற்படும். இதற்கு நாம் உட்கொள்ளும் அதிகமான அளவு உப்புக்கூட காரணமாக இருக்கலாம்.

இருமல்

நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். இருமல் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதேபோல் மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற ஒலி கேட்கும். 

சளி

நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும்.  இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும்.  

சோர்வு

இதயச் செயலிழப்பு அல்லது இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்கள் அதிகக் களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் கடுமையான சோர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுகிறது.

குமட்டல் மற்றும் பசியின்மை

கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளை சுற்றிக் கோத்திருக்கும் நீர், செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

தலைசுற்றல்

இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.  

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய நோய்க்கான பொதுவான அறிகுறி. மிக எளிதான வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

வியர்த்தல்

எந்தவொரு காரணமும் இல்லாமல் கடுமையாக வியர்த்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை இது, மாரடைப்பபுக்கான அறிகுறியாக இருக்கலாம். 

 

இதய வலி

இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும்.

சீரற்ற இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு சீரில்லாமல் இருப்பது இதயநோய்க்கான அறிகுறி. வழக்கத்துக்கு மாறாக, மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிக்கும். 

தோல் நிற மாற்றம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் தோல் நீல நிறமாக மாறும். இதற்கு ‘சயனோஸிஸ்’ (Cyanosis) என்று பெயர். இது, அரிதாகச் சிலருக்கு ஏற்படலாம்.

வருமுன் காப்பதே எப்போதும் சிறந்தது. இதய நோய்கள் தாக்குவதற்கு முன்னரே சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீண்ட நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழலாம். ஆனால், அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பாதிப்புகள் முற்றிவிடும். ‘இதயநோய்’ என்ற பிரமாண்டமான யானை வருவதற்கு முன்னதாகவே மணியோசையாக வரும் இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும். உரிய சிசிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது இதயத்தை இதமாக வைத்திருக்கும்; வலுவாக்கும்! 
நன்றி-  ஆனந்த விகடன்.


JOIN KALVICHUDAR CHANNEL