t> கல்விச்சுடர் எடப்பாடி தந்த ஷாக் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 March 2017

எடப்பாடி தந்த ஷாக்

குடிமக்களின் மகிழ்ச்சியே அரசனது மகிழ்ச்சி. அவர்களது நலமே தனது நலம். தனக்கு நன்மை பயக்கக்கூடியது மட்டும் நன்று என்று கருதாமல் மக்களுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய அனைத்தும் தனக்கும் நன்மை தரக்கூடியது என்று கருதுவது தான் அரசனின் பண்பு.
அர்த்த சாஸ்திரத்தின் இந்த வரிகளை மேற்கோள் காட்டிதான் கடந்தாண்டு நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அருகில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மேஜையை தட்டியது இன்னும் மறக்கவில்லை.
ஜெயலலிதாவுக்காக மட்டுமே இதை கூறினோம் என்பதை தற்போது நிரூபித்து வருகின்றனர், அவரது வழியில் வந்த ஆட்சியாளர்கள். அவர் இறந்ததும் கட்சி, ஆட்சியில் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து அம்சங்களுமே வேறு வழிகளில் நடைமுறைக்கு வர ஆரம்பித்தன.
மத்திய அரசு எவ்வளவோ மல்லுக்கட்டியும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை(ஜிஎஸ்டி) ஏற்க கடைசி வரை ஜெயலலிதா உடன்படவில்லை. அவரது வழியில் செயல்படுவோம் என்ற ஓபிஎஸ் அரசு முதலில் பச்சைக்கொடி காட்டியது. அவருக்கு பின் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு 20 நாட்களுக்குள் அனைத்து முஸ்தீபுகளையும் தற்போது தொடங்கி விட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயரும் போது ஒட்டுமொத்த நாடே மத்திய அரசை கரித்து கொட்டியது. இந்தமுறை தமிழக மக்களிடம் பெற்ற பாக்கியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்துள்ளது. மதிப்பு கூட்டு வரி(வாட்) பெட்ரோலுக்கு 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கு 21.43 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகவும் தமிழகத்தில் உயர்த்தப்பட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் ₹4 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ₹2 வரையிலும் அதிகரித்துள்ளது. அடுத்த சில தினங்களில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர், எண்ணெய் நிறுவனங்கள் பெயரில் மீண்டும் ஒரு விலை உயர்வு அறிவிப்பு வரலாம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. ஆனால் குறைந்தபோது விலை குறையவில்லை. மாறாக மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்திக்கொண்டன. வாட் வரியால் கடந்த 2015-16ல் மாநில அரசுக்கு ₹54,805 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டிலும் இதே அளவுக்கு தான் எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய உயர்வால் இந்த அளவு மேலும் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டியால் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை 5 ஆண்டுக்கு முழுமையாக ஈடு செய்வோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 2015-16ம் ஆண்டை அடிப்படையாக வைத்து 14 சதவீத வளர்ச்சியை கணக்கிட்டு இழப்பீடு வழங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதை பெறுவதற்கு பதில் மக்கள் மீது வரியை சுமத்தி ஈடு செய்வது துக்ளக் தர்பாராக தான் இருக்கும். நீட், ஹைட்ரோ கார்பன் போன்ற விஷயங்களிலும் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக தான் எடப்பாடி அரசு செயல்படுமோ என்பதற்கு இந்த முதல் அடியே உதாரணம்.
பணப்பிரச்னை, வறட்சி போன்ற பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வாட் வரி விதிப்பு, விலைவாசி ஏற்றத்திற்கு வழி வகுக்கும். மக்களின் மகிழ்ச்சி தான் அரசனது மகிழ்ச்சி என்றால் உடனடியாக வரி விதிப்பை கை விடவேண்டும். இல்லாவிட்டால் இதற்கு நாங்கள் வாடிவாசல், நெடுவாசல் போல புது வாசலை திறக்க வேண்டுமா என்று கேட்கின்றனர் மக்கள்.


JOIN KALVICHUDAR CHANNEL