t> கல்விச்சுடர் ஆர்.கே.நகரில் வீசும் அதிர்ஷ்ட காற்று.. எட்டு கிராம் தங்கம் ரெடி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2017

ஆர்.கே.நகரில் வீசும் அதிர்ஷ்ட காற்று.. எட்டு கிராம் தங்கம் ரெடி?

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, எட்டு கிராம் தங்க நாணயம் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாகக் கிடைத்த தகவலின்பேரில், தேர்தல் ஆணையம் ரகசிய விசாரணை நடத்திவருகிறது. 

ஆர்.கே. நகர் தொகுதியில், ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க. சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், தொப்பி சின்னத்திலும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கங்கைஅமரன், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா உள்பட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். டி.டி.வி.தினகரனைத் தவிர, மருது கணேஷும் மதுசூதனனும் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லி, ஓட்டு சேகரித்துவருகின்றனர். மதுசூதனனின் தனிப்பட்ட செல்வாக்கை நம்பி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தலைச் சந்திக்கின்றனர். டி.டி.வி.தினகரன் தரப்பு, ஜெயலலிதா மீதுள்ள நம்பிக்கையைவைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனது. இருவருக்கும் ஒதுக்கப்பட்ட சின்னங்கள், பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சின்னத்தைப் பிரபலப்படுத்த, இரு அணிகளும் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்மூலாவைக் கடைபிடிக்க, சில கட்சிகள் ஆர்வம்காட்டிவருகின்றன. அதில், சின்னத்தைத் தொலைத்த கட்சியில் ஒரு அணி, வாக்காளர்களுக்கு எட்டு கிராம் தங்க நாணயம் கொடுக்கப்போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, ஒன்றரை லட்சம் நாணயங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக, தேர்தல் பறக்கும்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தேர்தல் நெருங்குவதற்குள், இதுபோன்ற பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்கின்றனர், நடுநிலையாளர்கள்.

இதுகுறித்து, சின்னத்தைப் பறிகொடுத்த ஒருஅணியின் உள்வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.கே.நகரில் வெற்றிபெற, அனைத்து வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் திட்டங்கள், மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். தேர்தல் அறிக்கை தயாராக உள்ளது. இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். வாக்காளர்களைத் திருப்திபடுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.

எட்டு கிராம் தங்க நாணயம் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, "இது, தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் பரப்பும் வதந்தி. இன்றைய சூழ்நிலையில்,  ஓட்டுக்கு எட்டு கிராம் தங்க நாணயம் கொடுப்பது எளிதானதல்ல. பணம் கொடுத்துதான் நாங்கள் ஓட்டுக்களைப் பெறவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது" என்றனர் நம்பிக்கையுடன்.

தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு புகார்கள் வரவில்லை. தங்க நாணயம் தொடர்பாக வந்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். இந்தத் தேர்தலில் பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

 ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்களின் வாக்குறுதிகளோடு ரகசியமாக பரிசுப் பொருள்களும் வீடுதேடி வரத்தொடங்கி உள்ளதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. ஆர்.கே.நகர் வாக்காளர்களைக் கவரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, கட்சியினர் ஆர்வம்காட்டிவருகின்றனர். இதனால், அந்தப் தொகுதி வாக்காளர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசத்தொடங்கிவிட்டது. 

நன்றி: ஆனந்த விகடன்.


JOIN KALVICHUDAR CHANNEL