t> கல்விச்சுடர் 'நல்லா காப்பி அடி மகனே!’ - வட மாநிலங்களில் கேலிக்கூத்தாகும் பொதுத்தேர்வுகள்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 March 2017

'நல்லா காப்பி அடி மகனே!’ - வட மாநிலங்களில் கேலிக்கூத்தாகும் பொதுத்தேர்வுகள்!

மகனோ, மகளோ பத்தாம் வகுப்புக்குச் சென்று விட்டாலே, அந்த ஆண்டு வகுப்பு தொடங்கியதில் இருந்து, பொதுத்தேர்வை அவர்கள் எழுதி முடிக்கும் வரை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒருவித பதற்றத்தோடும், பரபரப்போடும் இருப்பர். அதுவும் பிளஸ்-2 என்றால் அதைவிட பதற்றம் தொற்றிக் கொள்ளும். மேல்படிப்புக்கு எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது என்பதில் தொடங்கி, நுழைவுத் தேர்வுகளை எழுதுவது வரை, குடும்பத்தினர் அனைவரும் பொதுத்தேர்வை எதிர்நோக்கி தங்களது அனைத்து சுக, துக்கங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, வெளியூர் பயணங்களையும் தவிர்த்து, மகன் / மகள் பொதுத்தேர்வுக்காக தியாகம் செய்வார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில் தான். வடமாநிலங்களில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஏனென்றால் மாணவர்கள் காப்பியடித்தோ, அல்லது விடைகளை வேறு யாராவது சொல்ல, அதனை அப்படியே எழுதியோ எந்தவித பதற்றமும் இல்லாமல் தேர்வு எழுதும் நிலை தற்போதும் தொடர்கிறது. பீகார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வின் போது, தேர்வு மைய கட்டடங்களின் மீது அமர்ந்து, மாணவர்கள் காப்பியடிக்க சிலர் உதவிய நிகழ்வு, ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்தது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற மையங்களில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஜன்னல் அருகே நின்று கொண்டு சிலர் விடைகளை எடுத்துச் சொல்லச் சொல்ல, மாணவர்கள் அதனை அப்படியே கேட்டு எழுதிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர், மாணவர்களுக்கு பின்புறம் அமர்ந்து கொண்டு, கேள்விகளுக்கான விடைகளை எழுதிக் கொடுக்க, அதனை அவர்கள் அப்படியே எழுதிய கூத்துகளும் அரங்கேறியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் ஃபரா என்ற இடத்தில், உள்ள ஷியாம்லால் இன்டர் காலேஜ் தேர்வு மையத்தில் 500 மீட்டர் இடைவெளியில் சில இளைஞர்கள் நின்றுகொண்டு, சந்தேகத்திற்குரிய வகையிலான நபர்கள் யாரும் வருகிறார்களா என்ற கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேறு சிலர், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு, அதற்குரிய பதிலை தெரிவித்துக் கொண்டிருந்தனர். மார்ச் 23-ம் தேதியன்று பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடைபெற்றபோதுதான் இந்த கேலிக்கூத்து அரங்கேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு உட்காராமல், அருகருகே அமர்ந்து தேர்வு எழுதியதையும் காண முடிந்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன. ராயா என்ற இடத்தில் உள்ள ராதா கோபால் இன்டர் காலேஜ் தேர்வு மையத்தில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பின்னால் உள்ள பெஞ்ச்-ல் பெற்றோர் அமர்ந்து கொண்டு, விடைகளைச் சொல்லிக் கொடுத்த நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன. தேர்வு மையத்தில் மாணவர்கள் பயங்கர சத்தத்துடன் பேசிக் கொண்டும், ஒருவருக்கொருவர் விடைகள் குறித்து விவாதித்துக் கொண்டும் இருந்ததை வட இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இதுபோன்ற முறைகேடுகளை அரங்கேற்றவும், தேர்வு எழுதும் போது விடைகளைச் சொல்லித்தரவும் மாணவர்கள் தலா 5,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சிலருக்கு அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 5 ஆயிரம் ரூபாய் கொடுப்போர், தாங்கள் எடுத்து வரும் விடைகளை வைத்து எழுதிக் கொள்ளவும், 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு, சரியான விடைகளைச் சொல்லித்தர சிலர் இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்தால் மட்டும் போதுமானது, தேர்வை வேறு யாராவது எழுதிக் கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் மாஃபியா கும்பல் ஒன்று, கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கூடுதல் வகுப்பு, பள்ளிகளில் 'ஸ்பெஷல் கிளாஸ்' என்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கடினமாகப் படித்து தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்கள், 80 அல்லது 90 சதவிகித மதிப்பெண்கள் வாங்குவதற்கு முட்டி மோதும் நிலை உள்ளது. ஒரு வீட்டில் பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பல்வேறு தியாகங்களைச் செய்யும்நிலையில், வட மாநிலங்களில் பொதுத்தேர்வு என்றாலே காப்பி என்ற நிலையை உருவாக்கி விட்டனர். அந்த மாநிலங்களில் பள்ளிக் கல்வித்துறை என்ற அரசு துறை செயல்படுகிறதா? பொதுத்தேர்வு நேரங்களில், மாணவர்கள் காப்பியடிக்காமல் இருப்பதை தவிர்க்க, கண்காணிப்பு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளார்களா? அல்லது அவர்களும் பணத்திற்கு விலை போய் விட்டார்களா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்படி முறைகேடாகத் தேர்வு எழுதி வரும் மாணவர்கள், எதிர்காலத்தில் எந்த அளவு திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்? அவர்களிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்? உத்தரப்பிரதேச அரசு பதில் சொல்லுமா?


JOIN KALVICHUDAR CHANNEL