t> கல்விச்சுடர் இந்தியாவில் மாடுகளுக்கும் இனி ஆதார் கார்டு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2017

இந்தியாவில் மாடுகளுக்கும் இனி ஆதார் கார்டு!


ஒரு சின்ன டேட்டா பேஸ் விஷயம் - தமிழ்நாட்டின் மக்கள் தொகையைவிட இந்தியாவில் மாடுகள் எண்ணிக்கை அதிகம். ஆம்! தமிழக மக்கள் தொகை 7.5 கோடி என்றால், இந்திய மாடுகளின் மாக்கள் தொகை - 8.5 கோடி. ‘மாடு மாதிரி போறான் பாரு’ என்று இனிமேல் யாரும் திட்ட முடியாது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

 பசுக்களும் எருமைகளும்இனி இந்தியாவின் முக்கியப் பிரஜைகள். அட ஆமாம் மக்களே! இந்தியா முழுவதும் உள்ள 8 கோடி மாடுகளுக்கும் ஆதார் கார்டு வழங்க மத்திய அரசு நடவடிக்கை.

"ஜல்லிக்கட்டு தடையை விலக்குவது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது!" வழிசொல்லும் வழக்கறிஞர்

‘மனுஷனுக்கே ஆதார் கார்டுகொடுக்கிறதுக்கு முக்கலா இருக்கு.. இதுல மாடுகளுக்கு எப்படி?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மனிதர்களைவிட இந்தியாவில் உள்ள மாடுகள் அனைத்துக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது மத்திய அரசு. ‘‘2017 இறுதிக்குள் இந்தியாவின் ஒவ்வொரு தனிப்பட்ட மாநிலங்களில் உள்ள மாடுகளுக்கும் ஆதார் அட்டை பொருத்தி விட வேண்டும்’’ என்கிறது அந்த அறிக்கை.

இந்தியா முழுவதும் மொத்தம் 4 கோடி எருமை மாடுகளும், 4.5 கோடி பசு மாடுகளும் உள்ளன. இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில்தான் மாடுகள் எண்ணிக்கை அதிகம். உ.பி.யில் உள்ள மாடுகளின் எண்ணிக்கை 140 லட்சம். இரண்டாம் இடம் மத்தியப் பிரதேச மாநிலம்; இங்குள்ள மாடு தொகை 90 லட்சம். ராஜஸ்தான் 84 லட்சம், குஜராத் 62 லட்சம், அப்படியே ஆந்திரா, தமிழ்நாடு என்று மாடுகளின் தொகையும் கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் உ.பி.யில் மட்டும் ஒவ்வொரு மாதத்துக்கும் 14 லட்சம் ஆதார் அட்டையும், ம.பி.யில் 7.5 லட்சம் மாடுகளுக்கும் ஆதார் அட்டை வழங்கினால்தான் அரசு விதித்துள்ள கெடுவுக்குள் பணி நிறைவடையும். இதற்காக 148 கோடி ரூபாய் செலவில், 1 லட்சம் டெக்னீஷியன்கள் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து இவர்கள் தங்கள் பணியைத் தொடங்கி விட்டார்கள்.

ஒவ்வொரு மாடுகளாகத் தேடிப் போய், மாடுகளின் காதுகளில் 12 இலக்க நம்பர் கொண்ட ‘டேக்’ ஒன்றை மாட்டி விட்டால் போதும்... அந்த மாடு இனிமேல் ஆதார் அட்டை கொண்ட இந்தியப் பிரஜை. இந்த பாலியூரித்தேன் டேக், டேம்பர் ப்ரூஃப் கொண்ட, அதாவது எந்தவித பொருட்களினாலும் சேதாரம் ஏற்படுத்த முடியாத அளவில் வாட்டர் புரூஃப்பும் கொண்டிருக்குமாம். இது மொத்தமே 8 கிராம் எடையை மட்டும் கொண்டிருப்பதால், மாடுகளுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காதாம். இந்த நம்பரைக் கொண்டு அந்த மாடுகளின் வயது, இனப் பெருக்கம் எப்போது நடந்தது, எத்தனை லிட்டர் பால் கொடுத்தது போன்ற அத்தனை விஷயங்களையும் கண்டுபிடிக்கலாம்.

சரி; மாடு குட்டிகள் போட்டால்? சில மாடுகள் வயது காரணமாக இறந்து போனால்? அதைக் கணக்கெடுப்பதற்கும் தனி டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். அதாவது, ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், அடிஷன் செய்வதுபோல், மாடுகளுக்கும் இந்தப் பணி அயராது நடக்கும். கூடவே இதில் மாடுகளின் உரிமையாளர்கள் பற்றிய விஷயங்களும் இதில் இருக்கும். அதோடு உரிமையாளர்களுக்கு ‘விலங்குகள் நல அட்டை’ ஒன்றும் வழங்கப்படும். ‘என் மாட்டைத் தள்ளிட்டுப் போயிட்டான்; இது என் மாடு’ போன்ற பஞ்சாயத்துக்கள் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்கிறார் ஆதார் கார்டு பணியில் இருக்கும் ஓர் அதிகாரி.

அது மட்டுமில்லை; இதன் மூலம் மாடு கடத்தல், மாடுகளை வதம் செய்து துன்புறுத்துதல் போன்ற சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் மாடுகளைக் கொன்று கறி சமைத்தல் இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அண்மையில் லட்சத்துக்கும் அதிகமான மாடுகள் சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்தப்பட்டன. வங்கதேசத்தில்  இந்திய மாடுகளுக்கு மவுசு அதிகம் என்பதால், இங்கு மாடுகள் - குதிரை விலை, யானை விலைக்குப் போவதாகவும் ஆய்வு சொல்கிறது. இனிமேல் இதுபோன்ற மாடு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றாலோ, மாடுகளை வதைத்தாலோ, மாட்டின் காதில் இருக்கும் ஆதார் எண் மூலம் யார் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை எளிதாகக் கண்டறிந்து விடுவார்கள். மேலும், இந்த ஆதார் எண் மூலம் மாடுகளுக்கு சரியான கால விகிதத்தில் தடுப்பூசி போடுகிறார்களா? முறையான சிகிச்சை நடக்கிறதா என்பதும் கண்டறியப்படுமாம். இதனால், மாடுகளின் இனச் சேர்க்கை மற்றும் பால் தரும் எண்ணிக்கையும் அதிகமாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.

‘‘கால்நடை உரிமையாளர்களுக்கு ஒரு கொஸ்டீனரி பேப்பர் ஒன்று தரப்படும். அதில் அவர்களின் முகவரி, தொலைபேசி எண், மாடுகளின் வயது போன்றவற்றை நிரப்பித் தர வேண்டும். இந்த விஷயங்கள் தேசிய கால்நடை மையத்தில் டேட்டா பேஸில் பதிவாகிவிடும். இதன் மூலம் கால்நடைத் திருட்டு, கால்நடை வதைகள், தேவையில்லாத இழப்புகள் போன்றவற்றை எளிதில் தடுக்கலாம். மேலும், 2022-க்குள் பால் வளம் அதிகமுள்ள நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்தான் உலகிலேயே கால்நடை வளம் அதிகம் கொண்ட நாடுகள். அந்த நாடுகளிலேயே இப்படி ஒரு சிஸ்டம் இல்லை. கால்நடைகளுக்கு என்று ID கார்டு சிஸ்டம் கொண்டு வந்த ஒரே நாடு இந்தியாதான்!’’ என்கிறார் கால்நடை முன்னேற்ற மையத்தின் மத்திய அரசுச் செயலாளர் கோவிந்த் பிரசாத்.

அப்போ இந்தியாவில் இனிமே மாடும் மனுஷனும் ஒன்னு!

JOIN KALVICHUDAR CHANNEL