t> கல்விச்சுடர் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் இதைப் படிக்க வேண்டாம், ப்ளீஸ்..! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 January 2017

ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் இதைப் படிக்க வேண்டாம், ப்ளீஸ்..!

உலகத்துக்கே படி அளந்தவன் தமிழன்' என்ற முதுமொழி, இன்று நிறம் மாறிக் கிடக்கிறது. அதே உணவுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். உலகம் உருண்டை என்பது இதுதானோ?


பிறருக்கு விவசாயத்தை கற்றுத் தந்தவன்

ஒரு காலத்தில், தமிழகத்தில் விளையும் விவசாயத்தை நம்பியே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் காத்துக்கிடந்தன. அண்டை மாநிலங்களுக்கும் விவசாயத்தை கற்றுத் தந்தவன் தமிழன். ஆனால், இன்று அந்த அண்டை மாநிலமே, கற்றுத் தந்தவனுக்கே தண்ணீர் தராமல் வஞ்சகம் செய்கிறது. இதனால், உணவிற்கு ஆந்திராவை நம்பியிருக்க வேண்டிய நெருக்கடி.

விவசாயத்தை வாழ்வியலாக கொண்டவன் தமிழன்

உலகம் முழுவதும் விவசாயம் என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மட்டும்தான், அதனை வாழ்வியலாகக் கொண்டு இயங்கி வந்தது. ஆனால், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு அரசாங்கமே விலை நிர்ணயம் செய்யும் காலம் என்று தோன்றியதோ, அன்றே விவசாயத்தின் அழிவு காலமும் தொடங்கிவிட்டது. அன்று முதல் உணவு படைக்கும் கடவுளாக மதிக்கப்பட்ட நமது பாரம்பரிய விவசாயிகள், மதிப்பிழந்து நசுக்கப்படும் வர்க்கமாக மாறிப்போனார்கள். இதன் விளைவைத்தான் இன்று வரையில் அனுபவித்து வருகிறோம்.

தமிழனின் விவசாய முறை இதுதான்

தமிழ்நாட்டை பொருத்தவரை ஆடி முதல், தை மாதம் வரை குளிர் காலமாகவும் மாசி முதல் ஆனி வரை கோடை காலமாகவும் திகழ்கிறது. இந்தக் காலநிலை மாற்றங்களை உணர்ந்த நம் முன்னோர்கள், 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பாடி வைத்திருக்கிறார்கள். ஆடி மாதத்தில் தொடங்கப்படும் விவசாயம் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை என மார்கழி மாத இறுதிக்குள் விவசாயம் முடிக்கப்பட்டு விடுகிறது. இதில் மார்கழியும் தை மாதமும் பனிக்காலமாக சேர்ந்து கொள்கிறது. மார்கழி இறுதிக்குள் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்கள்தான், தை மாதத்தில் கொண்டாடும் பொங்கல் திருநாளுக்கு படைக்கப்படுகிறது.

கோடைக்கால விவசாயம்

தை மாதத்திற்கு பிறகு பருவ நிலை மாறுவதால், வெயிலும், மழையும் கூடவோ, குறைந்தோ இருக்கும். அவற்றை பெரும்பாலும் கணிக்க முடியாது என்பதால், அதுபோன்ற காலங்களில் கடலை, எள்ளு, உளுந்து ஆகியவை மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்தப் பயிர்களை, நெற்பயிர்கள் அளவுக்கு கவனிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது மூன்று மட்டும்தான், அதிக வெயிலையும் அதிக மழையையும் தாக்குப் பிடிக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையின் அளவு குறைந்ததால், விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டதை காண முடிகிறது.
தை மாத்திற்கு பிறகு பெரும்பாலும் எந்த விவசாயியும், விவசாயம் செய்வதில்லை. தை மாதத்திற்கு பிறகு, அடுத்து வரக்கூடிய ஆடி மாதத்திற்குள் திருவிழாக்கள் வந்துவிடுகின்றன. அதிலும் முக்கியமாக, திருமணம், காதுகுத்து, வீடு கட்டுதல், குடிபோதல் போன்ற தங்களது வீட்டு விசேஷங்களை இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விவசாயிகள் நடத்திக்கொள்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டில் காலங்காலமாக இருந்து வரும் விவசாய வாழ்க்கை முறை. இன்று இந்த நிலை தலைகீழாக மாறியிருக்கிறது.

காளை விவசாயமும் - பொருளாதாரமும்

தை மாதத்திற்கு பிறகு, ஆடி மாதம் வரை பெரும்பாலான கொண்டாட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் சில கொண்டாட்டங்கள் விவசாயம் சார்ந்தே அமைந்து விடுகின்றது. தை மாதம் தொடக்கத்திலியே விவசாயம் சார்ந்த ஜல்லிக்கட்டு கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. இந்தக் கொண்டாட்டம் ஊருக்குத் தகுந்தார்போல், அடுத்த 2 மாதங்களுக்கு வெவ்வேறு ஊர்களில் நடைபெறுவது வழக்கம். இவற்றுடன் விவசாயம் சார்ந்த ரேக்ளா ரேஸ் பந்தயமும் பரவலாக நடத்தப்படுவது உண்டு. கொண்டாட்டங்களைத் தாண்டி, நெற்கதிர்கள் மற்றும் இன்னும் பிற பொருட்களைச் சுமந்து செல்லும் வாகனமாகவும், காளைகள் செயல்படுகின்றன. அதன் கழிவுகள் கூட, கழிந்துபோகாமல் உரமாகவும், நோய் தொற்றாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
உலகமயமாக்கலான இந்திய பெரும் சந்தையில், பல்வேறு பொருட்களை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியாமலும், அப்படியே கொண்டு வந்தாலும், அதனைச் சந்தைப்படுத்த முடியாமலும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் திணறின. இதில் பால், உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தொடங்கி, மருத்துவ பொருட்கள், கார், வாகனம் என அனைத்தும் அடக்கம். இப்படி ஒட்டு மொத்த இந்திய சந்தைக்கும், சந்தைக்கு வராமலேயே காளைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்தோ, தெரியாமலோ பக்க பலமாய் நின்றன. இதை ஆழமாகக் கவனிக்கும்போது புரியும்.
காளைகள் இருந்தால் இந்திய சந்தை சாத்தியமில்லை என்று உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள், அதனை ஒழிப்பதையே கடந்த காலங்களில் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இதன் காரணமாகவே, இந்திய அரசியல் தலைவர்கள்கூட, விவசாயத்திற்கு எதிராகச் செயல்பட்டனர். காலப்போக்கில் காளைகள் அழிய அழிய, அவற்றுடன் விவசாயமும் நலியத் தொடங்கியது. இதன் விளைவு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உயர்ந்து, நோய்கள் பெருக்கெடுத்து நிற்கிறது. வருடத்தில் பாதிநாளில் பலரும் நோயாளிகலாகத்தான் திரிகிறோம். இதனால் இந்திய சந்தையில், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் அதிகரித்து உயர்ந்து நிற்கிறது. வெளிநாட்டுப் பொருட்களை இங்குப் பயன்படுத்தாமல் இருப்பது, சாத்தியமில்லை என்ற அசாதாரமான சூழல் தற்போது இந்தியாவில் உருவாகி நிற்கிறது.

தற்கொலையா இது?
திட்டமிட்ட கொலை

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களே, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட, வானம் பார்த்த பூமியாக நாதியற்றுக் கிடக்கிறது. எப்போதும்போல, இந்த ஆண்டும் நீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கருகிய பயிரைக் கண்ட அதிர்ச்சியிலும் மனவேதனை தாங்க முடியா துயரிலும் தற்கொலை செய்து கொண்டனர். குறிப்பிட்ட 3 முதல் 5 மாவட்டங்களில் விவசாயத்தை காப்பற்ற முடியாத ஒரு மாநில அரசு, எப்படி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுச் செல்லப்போகிறது என்பது மிகப் பெரும் கேள்வியாக எழுந்து நிற்கிறது.
விவசாயத்தையும், விவசாயிகளை காக்க அரசு சார்பாக கடன் வழங்கப்படுவது கிடையாது. விளை நிலங்களை வைத்து அடகு வைத்து வாங்கப்படும் லோன்கள் அனைத்தும், குறிப்பிட்ட அரசியல் தலைவர்களின் கமிஷன் போக, கொஞ்சம் தான் விவசாயியின் கைக்கு கிடைக்கிறது. லோன் கிடைக்காதவர்கள், கந்து வட்டி வாங்கி நஷ்டப்படுகிறார்கள். அதிக நிலங்களை வைத்திருப்பவர்கள், விவசாயம் செய்யாமல் நிலத்தை குத்தகைக்கு விட்டு லாபம் பார்க்கிறார்கள். நஷ்டப்படும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஆலோசனையும் ஆறுதலும் சொல்ல எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இப்படியான தருணங்களில், விளை நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் கேட்டு சில நெருக்கடிகளை செயற்கையாக உருவாக்குவார்கள். ஊரில் எப்போதுமே எதையாவது பேசிக்கொண்டு திரியும் ஒரு நான்கு பேர், விவசாயம் செய்ய வேண்டாம் என்று கருத்து சொல்வார்கள். இன்னொரு பக்கம் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள், கழுத்தை நெரிப்பார்கள். இப்படியான தருணங்களை சந்தித்து அவமானப்பபட்ட விவசாயிகள்தான் பெரும்பாலும் தற்கொலை என்னும் முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால், இது தற்கொலை அல்ல. விவசாயிகளை வேண்டும் என்றே வஞ்சுக்கும் அரசும், லாபம் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவும், கமிஷன் என்ற அடிப்படை கொள்கை பிழைக்காகவும் அரசுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் திட்டமிட்ட படுகொலை. இதுபோன்ற எல்லா கொலைகளும் பட்டினி சாவாகக்கூட, நமது அதிகாரிகள் பதிவு செய்வது கிடையாது. சாவிலும் சதி நடக்கிறது.
ஒரு மனிதன் பட்டினியாலும், வறாட்சியாலும் சாவது என்பது, தேசிய அவமானம். இந்த அவமானம் தமிழக அரசுக்கு மட்டும் அல்ல, மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. ஆட்சியின் அதிகார பீடத்தில் இருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரியும் தலைகுனிந்து நிற்க வேண்டிய தருணம் இது.

இனி அரசு மட்டுமல்ல நாமும் செய்யவேண்டியது இதுதான்!'

பொங்கல், ஜல்லிக்கட்டு போன்ற கொண்டாட்டங்கள் வேண்டும் என்று விரும்பும் பொது ஜனங்கள், விவசாயிகளின் பொருட்களையே அதிகம் பயன்படுத்த இனி பழகிக்கொள்ள வேண்டும். இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களை முடிந்தவரைப் புறம் தள்ளுவது நல்லது. கடைக்காரர் சொன்ன விலைக்குத் தங்கத்தையும், வாகனங்களையும் வாங்கும் நாம், காய்கறிகளையும், கீரைகளையும் பேரம் பேசிதான் வாங்குகிறோம். இந்தத் தன்மையை ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்வது அவசியம்.
டெல்டா மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 100 கிராமம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், விவசாயம் பார்க்கும் கிராமம் என்று அதிகபட்சமாக 300 முதல் 500 வரையிலான கிராமங்கள் மட்டுமே இருக்கும். இவற்றில் எத்தனை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகின்றன என்ற அடிப்படை கணக்கு அரசிடம் இருக்கும். இன்றைய நிலையில் அனைத்து கிராமத்திலும், ரோடு, குடிநீர், ரேசன் கடை, வாக்காளர் அட்டை உள்பட அனைத்து விதமான அடிப்படை ஆதாரங்களும் அரசு சார்பில் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் கிராமங்கள் தோறும் கிராம நிர்வாக அதிகாரியும் இருக்கிறார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் போர் வசதி செய்யப்பட்டுள்ளது போல், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு 10 ஏக்கருக்கு ஒரு இடத்தில், அரசே முன்வந்து இலவசமாக போர் வசதி செய்து தர வேண்டும். இந்த போர் வசதிகளை, விவசாயம் செய்யப்படும் குறிப்பிட்ட ஆடி மாதம் முதல் மார்கழி வரை, ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கினால் போதும். இதற்கு பதிலாக இலவச மின்சாரம், இன்னும் பிற சலுகைகைள அரசு திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இவற்றுடன், கிராமங்கள் தோறும் உள்ள குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி மழை நீரை சேமிக்கும் விழிப்பு உணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் குறைந்தது 3 குளங்களை அமைக்க புதிய திட்டங்களையும் அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி, அவர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல், விவசாயிகளுக்கு எந்தவித உதவி செய்தாலும், அது தற்காலிகமாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!

இது எப்படி சாத்தியம்?

மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு திட்டம் போன்றவற்றுக்காக ஓர் ஏக்கர் நிலத்தில் சுமார் நூறு இடங்களில் சுமார் 10 ஆயிரம் அடிக்கு ஆழ் துளையிடுவது எப்படி சாத்தியமோ, அப்படித்தான் இதுவும் சாத்தியம். 100 நாட்களுக்குள் கோடிக்கணக்கான பேரிடம் ஆதார் அட்டை வழங்கியதும் 50 நாட்களுக்குள் கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்ததும் எப்படி சாத்தியமோ, அப்படிதான் இதுவும் சாத்தியம். விவசாயிகளையும் விவசாயத்தை காக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயம் செய்த கடைசி தலைமுறை என்ற அவப் பெயரொடு, நமது எதிர்கால சந்ததி நம்மை தூற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கமிஷன் தொகைக்காக வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவில் விவசாயத்தை அழிப்பதில் துளியும் நியாயம் இல்லை. இயற்கையை அழித்து, செயற்கையை வளர்ப்பது வளர்ச்சிகான அறிகுறி அல்ல. அது வீழ்ச்சிக்கான பெரும் குறி!

ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள், விவசாயிகளின் கொண்டாட்டத்தை மட்டும் எதிர்க்கவில்லை. அவர்களையே அறியாமல் நாட்டுக்கே சோறுபோடும் ஒட்டுமொத்த விவசாயத்தையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும் எதிர்த்து நிற்கிறார்கள் என்பதுதான் நிஜம்!

JOIN KALVICHUDAR CHANNEL