தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலை யில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். ‘அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை’ என்று கூறி, நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், தேர்தலை ரத்து செய்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.பார்த்திபன் அடங்கிய அமர்வு மறுத்து, விசாரணையை தள்ளிவைத்தது. இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற 5-வது அமர்வு நீதிபதிகள் முன்பு நேற்று நடந்தது. திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியதாவது: இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக தீர்த்துவிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தனி நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அந்தக் கெடுவுக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கான நடைமுறை களை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அப்படியிருந்தும் வெளிப்படையாக அறிவிப்பு செய்யா மல் காலம் தாழ்த்தி வருகிறது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களது வேட்பு மனுவை இணையதளத்தில் வெளிப் படையாக வெளியிட்டு, ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கும் தெரியப் படுத்த வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் கூறியபோது, ‘‘தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்று நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. எனவே, இதுகுறித்து இந்த வழக்கில் விரிவாக வாதிடுவதற்கு ஒருநாள் முழுவதும் தேவைப்படுகிறது. எனவே, வழக்கு விசாரணையை 5 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’’ என்றார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘வழக்கை வரும் 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைய தினம் நீங்கள் வாதிடலாம்’’ என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்