தாய்லாந்து அருகே உருவான மேலடுக்கு சுழற்சி நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீண்டும் புயல் வரும் என சிலர் பரப்பும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அரசு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல், கடந்த 12-ம் தேதி சென்னையைத் தாக்கியது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாய்லாந்து அருகே இரு நாட்களுக்கு முன்பு உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர்ந்து வலுப்பெற்று தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலவி வருகிறது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதன் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னையை தாக்கிய ‘வார்தா’ புயல் அரபிக் கடலுக்குச் சென்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து, இந்தியாவை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு கிடையாது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ் அப் வதந்தி
சென்னையில் அதிக மழை பெய்யும் என்று கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் தகவல்கள் வருகின்றன. அதில், ‘அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், நாசா அறிவிப்பின்படி, சென்னையில் அடுத்த 72 மணி நேரத்தில் 250 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மூழ்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குழப்பமும் அச்சமும் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலிடம் கேட்டபோது, ‘‘வானிலை மைய அறிவிப்பின்படி, வரும் 19-ம் தேதி வாக்கில் தென் தமிழக கடலோர பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேறு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. வாட்ஸ் அப்பில் பரப்பப்படுவது முற்றிலும் வதந்தியே. அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே ஏற்க வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறும்போது, ‘‘இது முற்றிலும் வதந்தி. இதே தகவல்தான் கடந்த ஆண்டும் பரப்பப்பட்டது. தற்போது மீண்டும் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்துக்கு மிதமான மழைதான் கிடைக்கும்’’ என்றார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||