குறைந்த மதிப்பு நோட்டுகள் தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டு அச்சடிப்பு, 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 1 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து ரூ.1000, ரூ.500 நோட்டுகள் ஒழிக்கப்பட்டு விட்டன.
இதன் காரணமாக வங்கிகளிலும், திறந்துள்ள ஒரு சில ஏ.டி.எம். மையங்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளே வினியோகிக்கப்படுகின்றன. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் ஒழிக்கப்பட்டு விட்டதால், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு சில்லரை மாற்றுவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறி உள்ளது.
மத்திய அரசு நடவடிக்கை
இந்த நிலையில் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் மராட்டிய மாநிலம், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாசிக் ரூபாய் நோட்டு அச்சக வட்டாரங்கள் கூறுகையில், “எங்கள் அச்சகத்தில் தினமும் 35 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. இப்போது அதை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளோம். இப்போது தினமும் 1 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடுகிறோம். 90 லட்சம் எண்ணிக்கையிலான ரூ.100, ரூ.50 மற்றும் ரூ.20 நோட்டுகள் அச்சிடப்படுகின்றன” என தெரிவித்தன.
இந்த அச்சகத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கிக்கு அச்சிட்ட பணம்
இதற்கிடையே நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) ரிசர்வ் வங்கிக்கு 4 கோடியே 30 லட்சம் ரூபாய் நோட்டுகளை நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இவற்றில் 1 கோடியே 10 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுகள் ரூ.500 நோட்டுகள் ஆகும். 1 கோடியே 20 லட்சம் நோட்டுகள் 100 ரூபாய் நோட்டுகள். தலா 1 கோடி எண்ணிக்கையிலான ரூ.50 மற்றும் ரூ.20 நோட்டுகளும் அடங்கும்.
நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம், ஜனவரி 31-ந் தேதிக்குள் 80 கோடி எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் என்றும், இவற்றில் பாதி எண்ணிக்கையிலானவை ரூ.500 நோட்டுகளாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ரூபாய் நோட்டு அச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்போது விடுமுறை விடப்படுவதில்லை, ஊழியர்கள் தொடர்ந்து 11 மணிநேரம் வேலை செய்கிறார்கள், மதிய உணவு அல்லது இரவு உணவு இடைவேளை விடப்படுவதில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||