t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2025


திருக்குறள்: 

குறள் 213:

 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற. 
             
 விளக்க உரை: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பழமொழி :
Life begins with self - belief.          

 தன்னம்பிக்கையில்   தான் வாழ்க்கை  ஆரம்பமாகிறது. 

இரண்டொழுக்க பண்புகள் :


1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி :

முதலில் மனிதன் குடிக்க ஆரம்பிக்கிறான் பின்னர் அது அவனை குடிக்க ஆரம்பிக்கிறது சிங்லெயிர் லூயிஸ்

பொது அறிவு : 1

.உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை எது?

அமெரிக்கா-மௌனா லோவா            America - Mauna Loa

02.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர்  யார்?

 இரண்டாம் இராசராசன் 

 Rajaraja Chola II

English words :

Jammed-stucked,


Creased- having unwanted lines or folds

தமிழ் இலக்கணம்: 

 நிறுத்தக்குறிகள்பயன்கள்:
1. பேச்சு நடையை எழுத்தில் கொண்டுவர உதவுகிறது.
2. கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
3. எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், ஏற்ற இறக்கத்துடன் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அறிவியல் களஞ்சியம் :

 அமெரிக்காவின் 'நாசா', ஐரோப்பிய விண்வெளி மையம் இணைந்து சமீபத்தில் 'சென்டினல் - 6பி' செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது கடல்நீர்மட்ட உயர்வை கண்காணித்தல், கடல் வெப்பநிலை, புயல் கண்காணிப்பு, கட்டமைப்புகளை பாதுகாத்தல், கடலோர சமூக திட்டமிடலுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வழங்கும் தகவலால் இந்திய கடலோர மக்களும் பயனடைவர் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக சாரசரி கடல்நீர்மட்ட உயர்வு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும்.

நீதிக்கதை

 துணிவு மிக்க சிறுவன்



கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடக மேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடக மேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடக மேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. 



விஷயம் இதுதான் நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடக மேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.



அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது. மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! என்று அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீசாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீசாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூறினார்கள். 



பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்து கொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

இன்றைய செய்திகள்

23.12.2025

⭐கிறிஸ்துமஸ் பண்டிகை -அரையாண்டு விடுமுறை: வெளியூர்களுக்கு 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

⭐ குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் அடுத்த
2 மாதங்களில் 74 ஆயிரம் புதிய வீடுகள் பயனாளிகளிடம் தமிழக அரசு ஒப்படைக்கவுள்ளது.

⭐இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள்- 48 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீர்ர் ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை ஜேக்கப் கைப்பற்றி உள்ளார்.

Today's Headlines

⭐Christmas Festival - Half-year vacation: 800 special buses to operate for outlying areas

⭐ With the aim of creating a slum-free Tamil Nadu, the Tamil Nadu government will hand over 74,000 new houses to beneficiaries in the next 2 months through the Kalaignin Kanavu Illam project.

⭐100% duty exemption on goods exported from India. Taxes on goods exported from New Zealand to India will be reduced by up to 95%.

 *SPORTS NEWS* 

🏀Most wickets in a year - New Zealand batsman Jacob has broken a 48-year-old record, taking a total of 81 wickets across all three formats of cricket.
Jacob has taken 23 wickets in the Test series against the West Indies.


Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


22 December 2025

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.12.2025


திருக்குறள்: 

குறள் 196: 
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் 
மக்கட் பதடி யெனல்.   

                
 விளக்க உரை: 

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

பழமொழி :
Affection grows where kindness lives.  

கருணை இருக்கும் இடத்தில் அன்பு வளரும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி :

மது உள்ளே சென்றதும் அறிவு வெளியேறி விடுகிறது  மது அருந்தக்கூடாது .- தாமஸ் பேகன்

பொது அறிவு : 

1.இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் யார்?

ஜான் பார்டீன் -John Bardeen

2.செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க உதவும் சாதனம் எது?

இதயமுடுக்கி -Pacemaker

English words :

Clampdown -crackdown


Stalemate-deadlock

தமிழ் இலக்கணம்: 

 முக்கால் புள்ளி பயன்படுத்தப்படும் இடங்கள் 3:
ஒரு கூற்றின் தொடர்ச்சியாக:
"நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை."

அறிவியல் களஞ்சியம் :

 உலக வெப்பநிலை 1850ல் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலையில் உலகின் வெப்பமான ஆண்டாக 2024 உள்ளது. இது தொழிற்புரட்சிக்கு (1850 - 1900) முந்தைய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.55 டிகிரி செல்சியஸ் அதிகம். 2ம் இடத்தில் 2023 (1.48 டிகிரி செல்சியஸ்) இருந்தது. தற்போது 2025 (ஜன., - நவ.,) சராசரி வெப்பநிலை 1.48 டிகிரி செல்சியஸ். இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இது 2ம் இடம் பெறுவது உறுதி. உலக சராசரி வெப்பநிலை உயர்வை, 1.5 செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 'பாரிஸ் ஒப்பந்தம் - 2015' குறிப்பிடுகிறது.

டிசம்பர் 22

தேசிய கணித தினம் 

தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்

சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
நீதிக்கதை

 சுயமரியாதை வேண்டும்



ஒரு நாள் புவனேஸ்வரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாகவும், சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு. ஆனால் தேவைபடும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். 



தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். 



ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். 



மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்சனையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.



வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? 



விவேகானந்தர்: முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.



வெள்ளைக்காரர்: தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man). 



விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். 



பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார். வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.12.2025

⭐டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி  ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.  

⭐நெல்லையில் ரூ.98 கோடியில் காயிதே மில்லத் நூலகம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

⭐காற்றுமாசு- பனிமூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு.
டெல்லியில் நேற்று காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

Today's Headlines

⭐The Railway Ministry has announced that train fares will be increased from December 26. * This is the second increase in train fares in a year, after the first increase on July 1.

⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone of the Rs. 98 crore Qaide Millat Library in Nellai.

⭐Air pollution-Smog: Flight services affected in Delhi. Delhi's air quality was in the 'very poor' category at 386 yesterday. 

 *SPORTS NEWS*

🏀 Australia won the third Ashes Test against England by 82 runs


19 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2025

திருக்குறள்: 

குறள் 115: 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி. 

விளக்க உரை: 

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி :
Success bows to the hardwork. 

கடின உழைப்புக்கு வெற்றி தலைவணங்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

நீ மதிக்கும் மனிதனை காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் தெரிந்து கொள்வேன் - தாமஸ் கார்லைல்

பொது அறிவு : 

01."குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?


அழ. வள்ளியப்பா

02.பாலை பதப்படுத்தும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் யார்?


 லூயிஸ் பாஸ்டர்
 Louis Pasteur
English words :

torched - burned

breach - breaking a rule

தமிழ் இலக்கணம்: 

 முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் 2:
விளக்கங்களைத் தொடங்குதல்: ஒரு தலைப்பு அல்லது பொதுவான கூற்றுக்குப் பிறகு விளக்கம் வரும்போது.
எ.கா.: நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை.

அறிவியல் களஞ்சியம் :

 வால் நட்சத்திரத்துக்கு வால் உள்ளது. சூரியனுக்கு அருகிலுள்ள புதன் கோளுக்கு வால் உள்ளது. 'கதிர்வீச்சு அழுத்தம்' காரணமாக சோடியம் அணுக்கள் வெளியே தள்ளப்பட்டு அதன் வளிமண்டலத்தை அகற்றி, அதற்கு நீண்ட ஒளிரும் வால் கிடைக்கிறது. அதுபோல பூமிக்கு வால் இருக்கிறதா என்றால் ஆம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால், விண்வெளியில் 20 லட்சம் கி.மீ., துாரத்துக்கு நீண்டுள்ளது. இது பூமியின் இருண்ட பக்கத்தில் இருப்பதால் இது தெரிவதில்லை. பூமியின் காந்தப்புலத்தை சூரிய காற்று சிதைப்பதால் இந்த வால் உருவாகிறது.

டிசம்பர் 19

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்

கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது
நீதிக்கதை

 மன உறுதி



ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். 



அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.



ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.



அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். 



ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

இன்றைய செய்திகள்

19.12.2025

⭐தமிழகத்தில் 1,439 பகுதிகளில் சட்டவிரோதக் கனிமத் திருட்டு கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கனிமவளக் கொள்ளை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⭐பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

⭐இந்திய அணுசக்தித் துறையில் 100% தனியார் முதலீட்டை அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 'ஷாந்தி மசோதா' மக்களவையில் நிறைவேறியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி: அரியானாவுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜார்க்கண்ட்
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Today's Headlines

⭐Illegal mineral theft has been detected, and cases have been registered in 1,439 areas in Tamil Nadu. The Madras High Court has ordered strict action against the mineral theft.

⭐ India is now the 4th largest economy, surpassing Japan. 

⭐The Shanthi Bill, which allows 100% private investment in India's nuclear energy sector, has been passed in the Lok Sabha

 SPORTS NEWS 

🏀Syed Mushtaq Ali Trophy Final: Jharkhand set a target of 263 runs for Haryana. The final of the Syed Mushtaq Ali Trophy is being held in Pune.


18 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2025



திருக்குறள்: 

குறள் 112: 

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப் புடைத்து. 

விளக்க உரை: 

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்

பழமொழி :
The harder you work,the brighter you shine. 

அதிகம் உழைத்தால், அதிகமாக ஒளிர்வீர்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.____விவேகானந்தர்

பொது அறிவு : 

01.வீரமாமுனிவரின் இயற்பெயர் 
என்ன?


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
Constantine Joseph Beschi

02.முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?

 கர்னல் ஜான் பென்னிகுவிக்
Colonel John Pennycuick
English words :

skipper -  captain of a ship

disbarred-removed

தமிழ் இலக்கணம்: 

 முக்காற்புள்ளி ( : ): அடுத்து வரும் சொற்கள் அல்லது வாக்கியத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.
முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் 1:
தலைப்பை விரித்து கூறல்: ஒரு தொகைச் சொல்லை (bundle word) அதன் பாகங்களாகப் பிரித்துச் சொல்லும்போது
எ.கா.: முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

அறிவியல் களஞ்சியம் :

 பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் பிரதிபலிப்பு கண்ணாடிகளை நிறுவி, இரவு பகுதிகளில் சூரிய ஒளியை திருப்பும் திட்டத்தை அடுத்தாண்டு செயல்படுத்த உள்ளதாக கலிபோர்னியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதிபலிப்பு கண்ணாடியுடன் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. சூரிய ஒளி குறைந்த பகுதிகளுக்கு இத்திட்டம் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. ஆனால் இது இயற்கைக்கு எதிரானது என வானியல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 18

ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்

நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
நீதிக்கதை

 கவலை பறந்தது



குட்டி யானைக்கு தாகம் எடுத்தது. குளத்தை தேடி சென்றது. கரையில் பசுமையான மரங்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சை நிறமும் சிவந்த வாயும் யானை குட்டியை மிகவும் கவர்ந்தது. என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்துவிட்டாரே இந்த கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று ஏங்கியது. அப்போது குக்கூ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திக்கில் குயில் ஒன்று பாடியது. கருப்பாக இருந்தாலும் குயில் இனிமையாக பாடுகிறதே என் குரலும் இருக்கிறதே என ஒரு தடவை பிளிறியது. சில வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் தேன் குடிப்பதை கண்டதும் ஐயோ என் தும்பிக்கை இந்த பூவின் மீது பட்டாலே அது உதிருமே பின் எப்படி தேன் குடிப்பது? என வருந்தியது.



தன்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதை எண்ணி கண்ணீர் விட்டது. குட்டியை காணாத தாய் யானை குளத்திற்கு வந்தது. குட்டியின் நிலை கண்ட தாய் யானை கண்ணே உன் குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளை பார்க்க தவறிவிட்டாய். கடவுள் நமக்கு பலமான தும்பிக்கை வெண்ணிற தந்தம் எல்லாம் தந்திருக்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூட சொல்வார்கள். இதோ இந்த மரத்தைக்கூட உன்னால் பிடுங்கி எறிந்துவிட முடியும் அனைவருக்கும் நிறை குறை உண்டு. குறைகளை மறந்து நிறைகளை எடுத்து வாழப் பழக வேண்டும் என்றது. தாயின் பேச்சைக் கேட்ட குட்டியானையின் கவலை பறந்தது.

இன்றைய செய்திகள்

18.12.2025

⭐ நிதிபற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், தமிழக அரசு, தனது நிதித் தேவைகளுக்காக மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

⭐சென்னையில் மேலும் 600 முதலமைச்சர் மின்சார பஸ்கள் கொண்டு வர உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்.
நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

⭐ இந்திய அளவில் 2024 ஆம் ஆண்டில் 4.88 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 தரவரிசை: முதல் இந்தியராக சாதனை படைத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார். டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.

Today's Headlines

⭐ Due to a financial shortage, the Tamil Nadu government has announced that it will sell bonds worth a total of Rs. 5,000 crore through auction to meet its economic needs.

⭐M.K.Stalin informed that 600 more electric buses will be brought to Chennai. Tamil Nadu is at the top of the targets released by NITI Aayog.

⭐ There were 4.88 lakh road accidents in India in 2024. Out of these, 1.77 lakh people lost their lives. 

 SPORTS NEWS

🏀 ICC T20 Rankings: Tamil Nadu batsman Varun Chakravarthy becomes the first Indian to achieve this feat. He is the 8th-highest-ranked player in the T20 bowlers' rankings.

17 December 2025

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


JOIN KALVICHUDAR CHANNEL